Saturday, June 28, 2014

கொஞ்சம் பொறுத்திருக்கலாம்!!!

"என்கூட வா நான் சொல்றன்..." தன் ஐந்து விரலால் என் சுட்டுவிரல் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

"எங்க கூட்டிப்போற?? அம்மா தேடுவாங்க... இங்கயே சொல்லன்.." கெஞ்சிக்கொண்டே அவள் இழுவையில் பின் தொடர்ந்தேன்.

"வீட்ல வச்சி சொல்ற விஷயமில்ல இது.. உன் எதிர்காலமே மாறப்போகுது.. சத்தம் போடாம வா" இழுவையில் வேகம் கூடியது.

அழகான புற்றரை, வயல் வெளி கடந்து போனோம். போனது நான் அவள் என்ற இருவர் அல்ல. அவளோடு கலந்து நான் இல்லாமல் போக அவள் மட்டும்தான்.

"உனக்கு என்ன பிடிச்சிருக்கா??" வழியில் இடைநிறுத்தி கேட்டாள்.

"ம்ம்.. ஆனா நீ யாரு?? எதுக்காக என்கிட்ட இதெல்லாம் கேக்குற??" செய்வதறியாது கேட்டேன்.

ஒரு வெட்ட வெளிக்குப் போய் சேர்ந்தோம். பனிமூட்டமாய் இருந்தது. கோள்கள் எல்லாம் தலைக்கு மேல் சுற்றியது. பெரிய சைஸ் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. வெள்ளை உடையாய் அவள் உடையும் மேலாடை நீங்கி என்னுடலும் காட்சி தந்தது.  

"கண்ண மூடு சொல்றன்.." என்றதும் நான் கண்ணை மூட நெஞ்சில் கை வைத்தாள். வானிலிருந்து இரண்டு துளிகள் கண்ணில் வீழ்ந்தன. கண்ணை லேசாக திறந்து பார்த்தேன்.

அருகில் அம்மா சிவப்பு நிற வாளியுடன்.

"கொஞ்சம் பொறுத்திருக்கலாம்" என்றது உள் மனது.

Saturday, June 7, 2014

நான் வேசி தான்..முகத்தில் சிரித்து
அகத்தில் அழுதும்
எட்டி அறைய மனம் துடிக்க
தட்டு தடவி உறவு கொண்டு
சுட்டுவிடும் விளக்கையும்
எட்ட நினைக்கும்
விட்டில் பூச்சியாய் வாழ்கிறேனே
நான் வேசிதான்...

வீட்டில் பிள்ளை
கோவிலில் பக்தன்
பாரில் குடிகாரன்
தெருவில் அய்யோக்கியன்
அவரவர் மனம் ஏற்றார்ப்போல் தினம்
என்னை மறைத்து வாழ்கிறேனே
நான் வேசிதான்...

அவள் துரோகி
இவன் துரோகி
நண்பனென்று எவனுமில்லை
அல்லல் முழுதும் என்னில் தான்
எனக்கென்று நான் வகுத்த
காமப்பசியை
பலரில் சாட்டி இன்பம் கண்ட
நான் வேசிதான்...

காசுக்காய் மலர்ந்தும்
காய்ச்சலிலும் ஓடியும்
பகட்டுக்காய் பரிணமித்தும்
ஏட்டுக்காய் ருசி ருசித்தும்
முதலாளிமார் இன்பம் காண
வியர்வை சிந்தி அசந்தேனே
நான் வேசிதான்...

தாய் பிரிந்து
பெற்ற சேய் பிரிந்து
நாடு பிரிந்து நண்பர் பிரிந்து
உற்ற உறவுகள் தான் பிரிந்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து
சில்லறைக்காய் ரெக்கை கட்டிய
நான் வேசிதான்...

வேசிக்கு பால் வராதாம்
ஆணென்ன பெண்ணென்ன
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும்
அத்தனை ஜீவனுமே
வேசிகள் தான்!!!

Tuesday, June 3, 2014

இது போதும் எனக்கு...

மூன்று மணிநேரம் பயணம். மொபைலில் இளையராஜா பாடல்களை பதிவேற்றிக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். மொபைல் சார்ஜ்க்கு வேலையில்லாமல் பஸ்ஸிலும் ராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் பாடல் ஒலித்தால் சாதா பயணம் கூட சொகுசுப்பயணம் தான். திடீரென்று பக்கத்து சீட்டை திரும்பி பார்த்தேன். அங்கே சஹானா.

"ஏய் சஹானா... எந்திரி..." எழுப்பினேன். எழுந்து பார்த்தவள்

"டேய் ரிமா... நீயா?? என்டா இத்தன நாளா என்ன தேடி வரல்ல?? மறந்துட்டியா??" என்றாள். 

"என்ன டி உளர்ற?? நான் உன்ன மறப்பேனா?? நீ செத்து போயிட்டதா எல்லாரும் சொன்னாங்களே" கண் கலங்கிவிட்டேன்.

"என்னது நான் செத்துட்டேனா?? உன்ன விட்டு எங்க டா போவேன்?? நம்மள பிரிக்கிறதுக்கு யாரோ உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க" என்றவள் என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். 

அவளில்லாத நாட்களில் நடந்த அத்தனையையும் சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் நின்ற பஸ்ஸில் ஒருவர் ஏறிய போது கண்டக்டர் என்னை பார்த்து சொன்னார் 

"தம்பி தள்ளி உக்காருப்பா.. ஒருத்தருக்கு ரெண்டு சீட்டுன்னா எப்படி மத்த ஆக்கள் உக்கார்றது??"  

#பேயோ பிரம்மையோ... இழந்த சஹானாவை மீண்டும் பார்த்தாயிற்று.